On this page
நியூசிலாந்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது கீழே உள்ள அரசு ஏஜென்சிகளின் பொறுப்பாகும். இந்தத் தகவல் அவர்கள் என்ன செய்கிறார்கள், மேலும் அவர்களால் உங்களுக்கு எப்படி ஆதரவளிக்க முடியும் என்பது பற்றியது. நீங்கள் வெளிநாட்டு தலையீடுகளை நியூசிலாந்து காவல்துறை மற்றும் NZSIS-யிடம் புகாரளிக்கலாம். புகாரளிப்பது பற்றி மேலும் அறிய வெளிநாட்டு தலையீட்டை எவ்வாறு புகாரளிப்பதுஎன்பதை பார்க்கவும்.
New Zealand Police | Ngā Pirihimana o Aotearoa
நியூசிலாந்து காவல்துறை, மக்கள் தங்கள் வீடுகளிலும், நமது சாலைகளிலும், அவர்களின் சமூகங்களிலும் பாதுகாப்பாக இருப்பதையும், பாதுகாப்பாக உணருவதையும் உறுதி செய்யும் சேவைகளை வழங்குகிறது. காவல்துறை 24 மணி நேரமும் குற்றச்செயல்கள் மற்றும் தீங்குகளை குறிவைத்து தடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறது. சுமார் 15,000 ஊழியர்களுடன், நாங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலையங்கள் மற்றும் பெரிய காவல் மையங்களிலிருந்து பணிபுரிகிறோம்.
நாங்கள் நிலம், கடல் மற்றும் வான்வழியாக செயல்படுகிறோம். மேலும் ஆண்டிற்கு 1.3 மில்லியனுக்கும் அதிகமான நிகழ்வுகளுக்கு பதிலளிக்கிறோம் – 925,000-க்கும் மேற்பட்ட 111 அழைப்புகளுக்கும் 743, 000-க்கும் மேற்பட்ட அவசரமற்ற அழைப்புகளுக்கும் பதிலளிக்கிறோம்.
காவல்துறை ஊழியர்கள் நியூசிலாந்தில் உள்ள அனைவருக்கும் உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் பயிற்சி பெற்றுள்ளனர். காவல் சேவைகள் மனித உரிமைகளை மதிக்கும் வகையிலும், சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் வழங்கப்படுகின்றன.
காவல்துறையினரின் முக்கியப் பணிகளில் குற்றச் செயல்களை குறைத்தல், தடுத்தல், விசாரணை செய்தல், தீர்வு காணுதல், மற்றும் சாலை விபத்துகளைத் தடுத்தல் ஆகியவை அடங்கும். காவல்துறையின் செயல்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- அமைதியைப் பேணுதல்
- பொதுப் பாதுகாப்பைப் பராமரித்தல்
- சட்ட அமலாக்கம்
- குற்றத் தடுப்பு
- சமூக ஆதரவு மற்றும் உறுதியளித்தல்
- தேசிய பாதுகாப்பு
- நியூசிலாந்திற்கு வெளியே காவல் பணிகளில் பங்கேற்பது
- அவசர மேலாண்மை.
இன தொடர்பு அதிகாரிகள்
காவல்துறை நாடு முழுவதும் இன தொடர்பு அதிகாரிகளைக் கொண்டிருப்பதன் மூலம் பன்முகத்தன்மையை மதிக்கிறது மற்றும் இன சமூகங்களை ஆதரிக்கிறது. அவர்கள் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றி, காவல் சேவைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை அணுகவும் உதவுகிறார்கள். சமூகக் அக்கறைகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்குத் வழங்குகிறார்கள், மேலும் இன சமூகங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதிலும் தடுப்பதிலும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
எங்கள் ஊழியர்கள் உங்கள் கவலைகளைக் கேட்கவும், பாதுகாப்பை மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உங்களுக்கோ அல்லது பிறருக்கோ பயத்தை ஏற்படுத்தும் வகையில் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ உங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால், தயவுசெய்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும். இனம், நம்பிக்கை, பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், இயலாமை அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையில் பகைமையால் தூண்டப்படும் எந்தச் சம்பவமும் இதில் அடங்கும்.
அனைத்து நியூசிலாந்து மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான நடத்தையை அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.
111 காவல்துறை அவசரநிலை:
பின்வரும் சூழ்நிலைகளில் 111 ஐ அழைத்து காவல்துறையை கேளுங்கள்:
- மக்கள் காயமடைந்திருந்தால் அல்லது ஆபத்தில் இருந்தால்; அல்லது
- உயிருக்கு அல்லது சொத்துக்கு கடுமையான, உடனடி அல்லது உடனடியாக நிகழக்கூடிய ஆபத்து இருந்தால்; அல்லது, ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது அல்லது இப்போதுதான் செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் இன்னும் சம்பவ இடத்திலேயே இருக்கிறார்கள் அல்லது இப்போதுதான் வெளியேறிவிட்டார்கள்.
105 காவல்துறை அவசரமற்ற புகாரளித்தல்:
தகவல் நேரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றால், மக்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான நடத்தை குறித்து தங்கள் உள்ளூர் காவல்துறைக்கு பின்வருமாறு புகாரளிக்கலாம்:
- 105.police.govt.nz -யில் ஆன்லைன் புகாரை நிரப்பவும் அல்லது நியூசிலாந்து காவல்துறையின் அவசரநிலை அல்லாத எண் 105 ஐ அழைக்கவும்
- அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லவும்
- 0800 555 111 என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவை அழைக்கவும்
நீங்கள் காவல்துறையிடம் பேச வேண்டுமென்றால், எந்த மொபைல் அல்லது லேண்ட்லைனிலிருந்தும் 105-ஐ அழைக்கவும். இது நாடு முழுவதும் கிடைக்கும் 24/7 இலவச சேவை ஆகும். உங்களால் 105-ஐத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், https://www.police.govt.nz/use-105 என்ற முகவரியில் எங்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்.
New Zealand Security Intelligence Service | Te Pā Whakamarumaru
நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவை (NZSIS) என்பது நியூசிலாந்தின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு ஏஜென்சி ஆகும். இதன் நோக்கம் நியூசிலாந்தையும் இங்கு வசிக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே ஆகும்.
NZSIS என்பது நியூசிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை விசாரிக்கும் ஒரு பொது சேவைத் துறையாகும். இதன் பொருள் நியூசிலாந்தை ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகமாகப் பாதுகாப்பதாகும். இது நியூசிலாந்தின் சர்வதேச உறவுகளையும் மற்றும் பொருளாதார நலனையும் பாதுகாக்க உதவுகிறது.
இது நியூசிலாந்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் மனித புலனாய்வு முதன்மை ஏஜென்சி ஆகும். இதன் பொருள் இது பல்வேறு மக்களிடம் பேசுவதன் மூலம் தகவல்களைச் சேகரிக்கிறது. NZSIS ஆல் சேகரிக்கப்படும் தகவல்கள், அரசாங்கத்திற்கும் பிற கொள்கை வகுப்பாளர்களுக்கும் நல்ல முடிவெடுப்பதை ஆதரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
அரசு ஏஜென்சிகள் மற்றும் பிற ஏஜென்சிகள் தங்கள் மக்கள், தகவல்கள் மற்றும் சொத்துக்களை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க உதவுவது NZSIS இன் மற்றொரு செயல்பாடு ஆகும்.
NZSIS கவனம் செலுத்தும் முக்கிய பகுதிகள்:
- வெளிநாட்டு தலையீடு, வெளிநாட்டு அரசின் கட்டாய நடவடிக்கைகளால் இன சமூகங்களை குறிவைப்பது உட்பட.
- உளவு பார்த்தல்
- கடுமையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம்
NZSIS என்பது நியூசிலாந்து காவல்துறை மற்றும் அரசாங்க தகவல் தொடர்பு பாதுகாப்பு பணியகம் (GCSB) போன்ற உள்நாட்டு கூட்டாளிகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது. இது அதன் பணியின் ஒரு பகுதியாக சமூகங்கள், iwi Māori இனத்தவர், உள்ளூர் அரசு, கல்வித் துறை, வணிகங்கள் மற்றும் அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுகிறது.
இது புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2017 என்ற சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இது NZSIS சட்டரீதியாக செயல்படுவதையும், அரசியல் ரீதியாக நடுநிலையாக இருப்பதையும், மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்கிறது. NZSIS என்பது நியூசிலாந்து அரசாங்கம் நிர்ணயித்த புலனாய்வு முன்னுரிமைகளின்படி செயல்பட வேண்டும்.
NZSIS ஆல் யாரையும் கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ முடியாது மேலும் அது மக்களின் நம்பிக்கை, தேசிய அடிப்படையில் அல்லது சட்டப்பூர்வமான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர்களை விசாரிக்காது.
அனைத்து பொதுச் சேவைத் துறைகளைப் போலவே, NZSIS குறைதீர்ப்பாணையம், தனியுரிமை ஆணையர், ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் மற்றும் பொதுச் சேவை ஆணையம் ஆகியவற்றுக்குப் பொறுப்புக் கூறுகிறது.
NZSIS என்பது புலனாய்வு மற்றும் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூலம் வலுவான, சுயாதீனமான மேற்பார்வைக்கு உட்பட்டது. புலனாய்வு அமைப்புகள் சட்டரீதியாகவும் ஒழுங்காகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்காக புகார்களை விசாரிப்பதும், விசாரணை நடத்துவதும் அவரது பணியாகும். NZSIS நியூசிலாந்து பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் அறிக Home | New Zealand Security Intelligence Service
தகவலறிந்து இருங்கள் Engagement | New Zealand Security Intelligence Service
ஒரு பிரச்சனையை புகாரளிக்கவும் Reporting a national security concern
Government Communications Security Bureau | Te Tira Tiaki
அரசாங்க தகவல் தொடர்பு பாதுகாப்பு செயலகம் (GCSB) என்பது சிக்னல்கள் புலனாய்வுத் துறைக்கான நியூசிலாந்தின் தலைமை ஏஜென்சி ஆகும். இது மின்னணு தகவல்தொடர்புகளிலிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் என்று பொருள்.
இந்த புலனாய்வு அரசு ஏஜென்சிகளுக்கு அவர்களின் இயக்கம் மற்றும் முடிவெடுத்தலில் ஆதரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. GCSB வெளிநாட்டு கூட்டாளிகளிடமிருந்தும், குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் கனடாவிலிருந்தும் புலனாய்வுத் தகல்களை பெறுகிறது. GCSB மற்றும் வெளிநாட்டு புலனாய்வுத்துறையின் இந்த கலவையானது நியூசிலாந்து உலகத்தைப் புரிந்துகொள்ளவும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.
GCSB தேசிய இணைய பாதுகாப்பு மையம் (NCSC) மூலம் இணைய பாதுகாப்பிற்கான தலைமை இயக்க ஏஜென்சியாகவும் உள்ளது. இது GCSB-க்குள் உள்ள ஒரு வணிகப் பிரிவாகும். தனிநபர்கள் முதல் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், அரசு மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் வரை - நியூசிலாந்து முழுவதும் இணைய பாதுகாப்பு சேவைகளை NCSC வழங்குகிறது.
ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இணைய பாதுகாப்பு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதில் கவனம் செலுத்தும் NCSC-யின் இணையத்தளமாகும். ஒரு இணைய
பாதுகாப்பு சம்பவத்தைப் புகாரளிக்க, ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள் அல்லது தேசிய இணைய பாதுகாப்பு மையத்தை ப்பார்வையிடவும்.
GCSB நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் (NZSIS) நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. நியூசிலாந்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பது, வெளிநாட்டு தலையீடு அச்சுறுத்தல்கள் மற்றும் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழவும் மற்றும் பேசவும் உள்ள உரிமை உள்ளிட்ட நியூசிலாந்தின் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை NZSIS விசாரிக்கிறது.
நியூசிலாந்து சட்டம் மற்றும் மனித உரிமைக் கடமைகளின்படி GCSB எப்போதும் செயல்படுவதை உறுதிசெய்யும் பல பாதுகாப்புகள் உள்ளன.
GCSB அதன் செயல்பாடுகளை புலனாய்வு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2017 இன் கீழ் செயல்படுத்துகிறது. இது நியூசிலாந்தை ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகமாக பாதுகாக்கும் சட்டமாகும்.
GCSB ஒரு பொது சேவைத் துறையாகும், மேலும் அனைத்து அரசு ஏஜென்சிகளை போலவே, இது குறைதீர்ப்பாணையம், தனியுரிமை ஆணையர், தணிக்கையாளர்-தலைமை அலுவலகம் மற்றும் பொது சேவை ஆணையத்திற்குட்பட்டது. GCSB புலனாய்வு மற்றும் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூலம் வலுவான, சுயாதீனமான மேற்பார்வைக்கு உட்பட்டது. புலனாய்வு அமைப்புகளுக்கு எதிரான புகார்களை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் விசாரித்து, அவை சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்க மதிப்பாய்வுகளையும் விசாரணைகளையும் நடத்துகிறார். நியூசிலாந்து பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்களுக்கும் GCSB பொறுப்புக் கூறுகிறது.
சுமார் 600 ஊழியர்கள் GCSB-யில் பணிபுரிகின்றனர். அவர்கள் நியூசிலாந்து சமூகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்டு பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிகின்றனர். GCSB www.gcsb.govt.nz என்ற பொது இணையதளத்தைக் கொண்டுள்ளது. இது அதன் பணிகளைப் பற்றி மேலும் விளக்குகிறது.
Human Rights Commission | Te Kāhui Tika Tangata
Te Kāhui Tika Tangata மனித உரிமைகள் ஆணையம் என்பது நியூசிலாந்தின் தேசிய மனித உரிமைகள் நிறுவனம் (NHRI) ஆகும். “He whakamana tangata. அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை” என்பது எங்கள் குறிக்கோள், மேலும் அனைத்து நியூசிலாந்து மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் பலப்படுத்துவதன் மூலமும், நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் Te Tiriti o Waitangi உட்பொதிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இதை நாங்கள் உள்ளடக்குகிறோம்.
மனித உரிமைகள் ஆணையத்தில் நான்கு ஆணையர்கள், ஒரு பழங்குடி உரிமைகள் நிர்வாக பங்குதாரர் மேலும் ஆக்லாந்து, வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களில் சுமார் 60 பணியாளர்கள் உள்ளனர்.
நாங்கள் பல வழிகளில் மனித உரிமைகளை ஊக்குவித்து பாதுகாக்கிறோம். இவற்றில் ஒன்று, மனித உரிமைகள் சட்டம் 1993 இன் கீழ் சட்டவிரோத பாகுபாடு குறித்த புகார்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்ய உதவும் எங்கள் இலவச மற்றும் ரகசிய சேவைகள் மூலம்.
எங்கள் கேஸ் ஆலோசகர்கள் மற்றும் நடுவர்கள் மக்களுடன் இணைந்து தகவல்களை வழங்கவும், ஆரம்பகால தீர்வுக்கு ஆதரவளிக்கவும், தகராறு தீர்வு சேவைகளை வழங்கவும் பணியாற்றுகிறார்கள். எங்கள் சேவைகள் இலவசம் மற்றும் இரகசியமானது. நாங்கள் புகார்களை விசாரிப்பதில்லை அல்லது சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிப்பதில்லை.
உங்கள் இனம், மதம், பாலினம், பாலின வெளிப்பாடு, பாலியல் நோக்குநிலை, இயலாமை அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பண்பு காரணமாக நீங்கள் பாகுபாட்டை அனுபவித்ததாக நீங்கள் நினைத்தால், நீங்கள் புகார் அளிக்கலாம்.
நீங்கள் பாலியல் துன்புறுத்தல், தேவையற்ற பாலியல் நடத்தையை அனுபவித்திருந்தால் அல்லது உங்கள் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின வெளிப்பாட்டை யாராவது மாற்ற முயற்சித்தால், நீங்கள் புகார் செய்யலாம்.
பாகுபாடு என்பது பணியளிப்பவர், கடைக்காரர், ஆசிரியர் போன்ற ஒரு தனிநபரிடமிருந்து அல்லது உணவகம் அல்லது அரசு நிறுவனம் போன்ற ஒரு அமைப்பு அல்லது சேவையிடமிருந்து வரலாம்.
மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரளிப்பது இலவசம் மற்றும் இரகசியமானது. புகார் அளித்தலை பற்றி மேலும் அறிய, tikatangata.org.nz என்ற எங்கள் இணையதளத்தை பார்வையிடவும்.
தகவல் te reo Māori , சமோவான், டோங்கன், பாரம்பரிய சீனம், எளிமைப்படுத்தப்பட்ட சீனம் மற்றும் இந்தி மொழிகளிலும், ஈஸி ரீட், பிரெயில் கோப்பு, பெரிய அச்சு மற்றும் ஆடியோ போன்ற அணுகக்கூடிய வடிவங்களிலும் கிடைக்கிறது.
He whakamana tangata.
அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை.
Ombudsman | Kaitiaki Mana Tangata
மக்களுக்கு அரசு ஏஜென்சி மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் அரசு உட்பட இவற்றுடன் பிரச்சனைகள் ஏற்படும் போது குறைதீர்ப்பாணையம் உதவ முடியும். உதாரணமாக, சமூக மேம்பாட்டு அமைச்சகம், நியூசிலாந்து குடியேற்றம், உங்கள் குழந்தையின் பள்ளி மற்றும் உங்கள் உள்ளூர் கவுன்சில்.
குறைதீர்ப்பாணையத்திடம் விசாரிப்பது அல்லது புகார் அளிப்பது இலவசம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது.
ஒரு அரசு ஏஜென்சி உங்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் செயல்பட்டதாகவோ அல்லது முடிவுகளை எடுத்ததாகவோ நீங்கள் நம்பினால், அவை நியாயமற்றவை, நேர்மையற்றவை அல்லது தவறானவை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிக்கலாம். உங்கள் புகார் கவனமாக பரிசீலனை செய்யப்படும். குறைதீர்ப்பாணையம் முதலில் உங்களை ஏஜென்சியிடம் புகார் அளிக்க சொல்லலாம் மற்றும் அதை எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கலாம். குறைதீர்ப்பாணையம் உங்கள் பிரச்னைகளை நீங்கள் எழுப்பக்கூடிய வேறு வழிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கலாம். குறைதீர்ப்பாணையம் உங்கள் புகாரைத் தீர்க்க அல்லது அதை விசாரிக்க உதவலாம்.
ஒரு அரசு ஏஜென்சி உங்களுக்குத் தகவல் வழங்க மறுத்தால், நீங்கள் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் அளிக்கலாம்.
தங்கள் பணியிடத்தில் இருக்கும் கடுமையான தவறுகளை வெளிப்படுத்த விரும்புவோருக்கு, அல்லது வெளிப்படுத்தலைச் செய்யும்போது அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறித்து ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கும் குறைதீர்ப்பாணையம் உதவுகிறது. குறைதீர்ப்பாணையம் வெளிப்படுத்தல்களை விசாரிக்கலாம் அல்லது அவற்றைப் பரிசீலிக்க ஒரு 'பொருத்தமான ஆணையத்தை' பரிந்துரைக்கலாம்.
குறைதீர்ப்பாணையத்தை தொடர்புகொள்வதால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் பிரச்சனையைத் தீர்க்க உதவுவது அவசியமானால் தவிர, குறைதீர்ப்பாணையம் உங்கள் பிரச்சனையைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லக்கூடாது.
குறைதீர்ப்பாணையம் சுயாதீனமானது மேலும் இது சட்ட ஆலோசனைகளை வழங்குவதில்லை, அல்லது ஒரு வழக்கறிஞராகவோ அல்லது ஏஜென்சியாகவோ செயல்படுவதில்லை.
தொடர்பு கொள்ளவும்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது புகார் அளிக்க விரும்பினால், நீங்கள் குறைதீர்ப்பாணையத்தை தொடர்பு கொள்ளலாம்.
- இலவசதொலைபேசி: 0800 802 602
- ஆன்லைனில்குறைதீர்ப்பாணயத்தின்இணையதளத்தில்உள்ளபுகார்படிவம்வழியாக பார்வையிடவும்: https://www.ombudsman.parliament.nz/ 'Get Help என்பதைக் கிளிக் செய்யவும் (பொதுமக்களுக்கு)’
- மின்னஞ்சல்: info@ombudsman.parliament.nz
- அஞ்சல்: The Ombudsman, PO Box 10152, Wellington 6143
பல மொழிகள் மற்றும் வடிவங்களில் பல்வேறு பயனுள்ள ஆதாரங்கள் மற்றும் வெளியீடுகள் குறைதீர்ப்பாணயத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன.